
ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தன்னிடம் பணி புரியும் இளைஞர்களிடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் வங்கிக்குச் சென்றுள்ளனர். அங்கு வங்கி மேலாளர் வங்கியில் பணம் செலுத்தும் நேரம் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது உணவு இடைவெளி நேரம் என்றும் கூறி 3 மணிக்கு மேல் வந்து வங்கியில் டெபாசிட் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர்கள் வங்கியில் இருந்து வெளியே வந்து எதிரே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது கையில் வைத்திருந்த ரூபாய் 4 லட்சம் பணத்தை தாங்கள் வந்த ஸ்கூட்டியின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். தொடர்ந்து ஹோட்டலில் 80 ரூபாய் பிரியாணியை அவர்கள் சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
உணவு உண்ட பின் வெளியில் வந்து மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் உள்ள நான்கு லட்சம் ரூபாய் பணத்தை எடுக்க வண்டியின் இருக்கையை திறந்த போது அதில் நான்கு லட்சம் ரூபாய் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். தொடர் விசாரணையில் அப்பகுதி சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர் ஒருவர் வண்டியின் அருகே சென்று லாவகமாக வண்டியின் இருக்கையை திறந்து பணத்தை எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீடியோவின்படி, வங்கியில் இருந்து அந்த இளைஞர்கள் முதல்முறை வெளியே வந்துகொண்டிருந்த போதே அவர்களை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த இளைஞர்கள் பணத்தை தங்களின் வண்டியின் பின்புறம் வைத்ததையும் நோட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து ஹோட்டலின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்கள் உள்ளே சென்றதை பயன்படுத்திக்கொண்டு, பணத்தை லாவகமாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 80 ரூபாய் பிரியாணி சாப்பிட அவர்கள் சென்றபோது, 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை இங்கே காணலாம்: