ஆந்திரா: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – இருவர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பட்டாசு கடைகள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கான சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் லைசன்ஸ் பெற்ற பட்டாசு கடைகளை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென ஒரு கடையில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதில் அடுத்தடுத்து இருந்த 15, 16, 17 எண்கள் கொண்ட பட்டாசு கடைகளுக்கு பரவி கடைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தால் 15 ஆம் நம்பர் கடையில் இருந்த பிரம்மா மற்றும் காசி ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து ஜிம்காண மைதானத்தின் கடை வைத்திருந்தவர்களும் பொதுமக்களும் அலறி அடித்து ஓடிய நிலையில், சிலர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பட்டாசு கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த விஜயவாடா காவல் ஆணையர் கிராந்தி ரானா டாட்டா, எம்எல்ஏ விஷ்ணுவரதன் ஆகியோர் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதானத்தின் அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்த நிலையில், தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.