
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைக்குமா, காங்கிரஸ் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபையா என நண்பகலுக்குள் தெரிய வரும். இந்நிலையில் கர்நாடக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகா பகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்...
சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிவமொக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கொண்டது மத்திய கர்நாடகா பகுதி. 26 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது இது.
மத்திய கர்நாடகாவில் பாஜகவின் செல்வாக்கு சற்றே அதிகம் என்பது கடந்த 3 தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது.
* 2008 தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றிருந்தன. மஜத ஓரிடத்திலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வென்றிருந்தனர்.
* 2013-இல், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், மஜத 6 இடங்களிலும் வென்ற நிலையில், பிற கட்சிகள் 2 இடங்களைக் கைப்பற்றின.
* 2018-இல், பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றிருந்தன.
எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுராவில் களமிறங்குகிறார்.
முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன்களில் குமார் பாஜக சார்பிலும், மது காங்கிரஸ் சார்பிலும் ‘சொரபா’ தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது இத்தொகுதியின் கவனத்தை ஈர்க்கிறது.
கர்நாடகாவில் இருக்கும் பிராந்தியங்களிலேயே மிகச் சிறியது கடலோர கர்நாடகா பகுதி. ஆனால், மாநிலத்திலேயே பாஜக வலுவாக உள்ள பகுதியும் இதுதான். கடலோர கர்நாடகாவில் மங்களூரு, உடுப்பி போன்ற பகுதிகளில் சமூக, இன ரீதியான மோதல்களும் அதிகம் என்பதால், இது பதற்றமான பகுதியாக உள்ளது. ஹிஜாப் அணியக் கூடாது என்ற சர்ச்சையும் இப்பகுதியில் இருந்துதான் தொடங்கியது.
இங்குள்ள 21 தொகுதிகளில்,
* 2008 பேரவை தேர்தலில் பாஜக 12, காங்கிரஸ் 7, மஜத 2 இடங்களில் வென்றிருந்தன.
* 2013 தேர்தலில், பாஜக 5 இடங்களில் வென்றிருந்தாலும் 34% வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் 13 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் வென்றிருந்தன.
* 2018-இல் இங்கு பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வென்றன.
மீண்டும் அரியணை ஏற கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா பகுதிகளை பாஜக பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், இங்கு அதிக இடங்களை வெல்ல காங்கிரஸும் முனைப்புடன் உள்ளதால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.