காஷ்மீர் டூ குமரி : 4000 கிலோ மீட்டரை 50 நாட்களில் கடக்க ராணுவ வீரர் மாரத்தான் இலக்கு!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 4000 கிலோ மீட்டர் தூரத்தை 50 நாட்களில் கடக்க ராணுவ வீரர் ஒருவர் இலக்கு நிர்ணயித்து தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளார். இந்திய ராணுவத்தின் தடகள வீரரான வேலு தான் அந்த ராணுவ வீரர். ஸ்ரீநகரிலிருந்து தனது நீண்ட நெடுந்தூர ஓட்டத்தை அவர் துவங்கியுள்ளார்.
டெல்லி, இந்தூர், மும்பை, பெங்களூரு வழியாக கன்னியாகுமரியை அவர் அடைவார் என்கிறது அவரது ரூட் மேப். ராணுவ வீரர்கள் புடை சூழ மூத்த அதிகாரிகள் கொடியசைத்து அவரது ஓட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
ராணுவத்தில் இணைவதற்கு முன்னதாக வேலு பள்ளி நாட்களில் இருந்தே நீண்ட தூர ஓட்டத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். ராணுவத்தில் இணைந்த பிறகு மாரத்தான் ஓட்டங்களிலும் அவர் கலந்து கொள்வதை வழக்கமாக்கி உள்ளார்.
“பசுமையான இந்தியா” மற்றும் “ஒரே நாடு, ஒரே ஸ்பிரிட்” என இரண்டு குறிக்கோள்களை முன்வைத்து அவர் இந்த ஓட்டத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்க வேண்டும் என விரும்புகிறார். வேலு இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கிறார் என அவரை புகழ்கின்றனர் ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள்.
“நான் 15 ஆண்டு காலமாக ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவுக்காக அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு 1600 கிலோ மீட்டர் தூரம் ஓடி லிம்கா சாதனை புரிந்துள்ளேன். இந்த ஆண்டு கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
4000 கிலோ மீட்டர் தூரத்தை 47 முதல் 48 நாட்களுக்குள் கடக்க விரும்புகிறேன். இருந்தாலும் கூடுதலாக இரண்டு நாட்களை சேர்த்து கொண்டுள்ளேன். இந்த ஓட்டத்தை எனது அணியின் சக வீரரும், அண்மையில் மறைந்த எல். எல். மீனாவுக்காக அர்பணிக்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.