பச்சிளம் குழந்தைக்காக காற்றாய் பறந்த ஆம்புலன்ஸ் ! உயிரை காப்பாற்ற கைகோர்த்த கேரள மக்கள்
கேரளாவில் நேற்று சமூக வலைதளங்கள் முழுவதும் KL 60 J 7739 என்ற எண் கொண்ட ஆம்புலன்சின் புகைப்படம் ஷேர் செய்யப்பட்டது. 'இந்த எண் கொண்ட ஆம்புலன்ஸ் மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கிறது. தயவுசெய்து வழி ஏற்படுத்தி கொடுக்கவும்' என்ற தலைப்புடன் வைரலாக பரவியது. கேரள முதலமைச்சர், திரைத்துறையினர் என பலரும் இதனை ஷேர் செய்தனர். 12க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் கைகோர்த்து அந்த ஆம்புலன்சை தடையின்றி 400கிமீ பயணம் செய்து வைத்தார்கள். அந்த ஆம்புலன்சில் இருந்தது பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை.
பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை ஒன்று கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் இதய குழாய் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைக்கு கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. காலதாமதம் செய்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் வான்வழி மார்க்கமாக குழந்தையை கேரள கொண்டுசெல்ல முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் உடல்நிலை வான்மார்க்கமாக கொண்டு செல்ல ஏதுவாக இல்லை என்றும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு ஆம்புலன்ஸ் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. ஆம்புலன்ஸ் பயணம் பேஸ்புக்கில் நேரலையும் செய்யப்பட்டது. கேரளாவில் உள்ள பலரும் அந்த பதிவை ஷேர் செய்ய போகும் வழி எங்கும் ஆம்புலன்ஸுக்கு பொதுமக்கள் வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள சுகாதார அமைச்சர், திருவனந்தபுரம் வரை செல்ல நேரம் எடுக்கும் என்பதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்குமாறு குழந்தையின் பெற்றோருக்கு வலியுறுத்தினார்.
இதனையடுத்து பயண தூரம் குறைக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 400 கிமீக்கும் அதிகமான மங்களூரு-கொச்சி பயண தூரத்தை சாலைமார்க்கமாக கடக்க 10 மணி நேரத்துக்கும் மேலாகும். ஆனால் பேஸ்புக் நேரலை, பொதுமக்கள் உதவியுடன் வெறும் ஐந்தரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் பயணம் செய்தது. குழந்தையின் உயிரை காப்பதற்காக ஆம்புலன்ஸை திறம்பட ஓட்டிச்சென்ற ஓட்டுநர் ஹாசனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என கேரள அரசு உறுதி அளித்துள்ளது.