பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? - அமித்ஷா
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாகவும் முழு பேட்டியிலிருந்து ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு தன் மீது தவறான கருத்தாக்கம் ஏற்படுத்தப்படுவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் அமித்ஷா உரை நிகழ்த்தினார். அதில், ப சிதம்பரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித்ஷாவின் உரை
அதில், “ ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள். பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே நான் ஸ்ரீநகர் சென்றேன். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் தப்பிச் சென்றுவிடாமல் தடுத்தோம். அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற 3 பேரும் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட 4 பேர், கொல்லப்பட்ட 3 பேரை அடையாளம் காட்டியுள்ளனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம்9 ரக துப்பாக்கி , 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மக்களை கொன்றுள்ளனர். அதனை நாங்கள் பறிமுதல் செய்துவிட்டோம்.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் முலம் பிரதமர் மோடி கொன்றார். ஆபரேஷன் மகாதேவில் 3 பேரை சுட்டுக்கொன்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனிவரும் காலத்தில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தியுள்ளோம். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலியை நான் நேரில் உணர்ந்தேன். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக 3000 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர ப.சிதம்பரம் முயற்சிக்கிறார்
மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான். ஆனால், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது? ( என ப. சிதம்பரத்திடம் அமித்ஷா கேள்வி). முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்?. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர ப.சிதம்பரம் முயற்சிக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கிவிட்டார். ராஜ்நாத் சிங் விளக்கத்துக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன. எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். உள்ளூர் பயங்கரவாதிகள் என சொல்ல ப சிதம்பரத்திடம் என்ன ஆதாரம் உள்ளது? .
சிதம்பரம் & கோ ஆட்சியில் இருக்கும்போது தாக்கிய பயங்கரவாதிகளை மோடி ஆட்சியில் அழித்தோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிஹாரில் பிரதமர் மோடி பேசியது குறித்து இப்போது விளக்குகிறேன்.பஹல்காம் தாக்குதல் பற்றி பிரதமர் பேசியது தேர்தலுக்காக அல்ல. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 நிமிடங்களில் 9 முகாம்களை முற்றாக அழித்தோம். ஆபரேஷன் சிந்தூரின்போது பொதுமக்கள் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்குள் 100 கிமீ பயணித்து அவர்கள் நிலத்திலேயே அவர்களை தாக்கினோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையதுதான். சிதம்பரம் & கோ ஆட்சியில் இருக்கும்போது தாக்கிய பயங்கரவாதிகளை மோடி ஆட்சியில் அழித்தோம். மோடி அரசு மன்மோகன் அரசைப்போல் வேடிக்கை பார்க்காது. காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். மோடி அரசு மன்மோகன் அரசைப்போல் அமைதியாக இருக்காது. பிரதமர் மோடி உத்தரவை அடுத்து அனைத்து பயங்கர முகாம்களையும் அழித்துவிட்டோம்.
இப்போது நடப்பது மோடி ஆட்சி. மன்மோகன் ஆட்சி அல்ல. நேருவின் போர் நிறுத்தால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்றிருந்தால் பிரச்சினை வந்திருக்கிறாது. பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை ஏள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம். ” என்று பேசியிருக்கிறார்.