மாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா
பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜகவின் தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என பாஜக முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக தலைவர் அமித் ஷா குஜராத்தில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், அமித் ஷாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் அவர் பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் பாஜகவின் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
எனவே இன்றைய கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் தலைவராக அமித் ஷாவே தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் அமித் ஷா சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.