தமிழகத்தில் அமித் ஷா வியூகம் கை கொடுக்குமா?

தமிழகத்தில் அமித் ஷா வியூகம் கை கொடுக்குமா?
தமிழகத்தில் அமித் ஷா வியூகம் கை கொடுக்குமா?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அமித் ஷாவின் வருகை பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் ரீதியான அமித் ஷா இதுவரை சாதித்தது என்ன? ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெறுவதற்கும், கட்சியை பலப்படுத்துவதற்கும் அவர் எடுத்த முயற்சிகள் என்னென்ன?

பாஜகவின் தேர்தல் அரசியல் ராஜதந்திரியாக பார்க்கப்படுபவர் அமித் ஷா. 2019ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து அக்கட்சியை பெரும்பாலான மாநிலங்களில் ஆழமாக காலுன்ற காரணமாக இருந்தவர். மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தந்திரமாக செயல்பட்டு, கட்சியை வளர்த்தெடுப்பது என்பது தான் அமித்ஷாவின் தனிபாணி.

தமிழகத்தில் அதிமுக திமுக இணைந்து தேர்தலை சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு தேர்தல்தான் 2015ஆம் ஆண்டு பீகாரில் நடந்தது. எதிரிகளாக இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால் மிக கச்சிதமாக இதையே அதிருப்திகரமான விஷயமாக மாற்றி உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி அதிலிருந்து வெளிவந்தவர்களை தங்கள் வசம் சேர்த்துக்கொண்டு வெற்றியை வசமாக்கியது பாஜக.

பிறகு அதே கூட்டணியை உடைத்து நிதீஷ் குமாருடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்து தற்போது இரண்டாவது முறையாகவும் ஆட்சியை தொடர்கிறது. இதற்கான முழுமையான வியூகங்களை அமைத்தவர் அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அமித் ஷா தான். 2016ஆம் ஆண்டு வரை அருணாச்சல் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சியின் கனவு கோட்டையாக தான் இருந்தது. அமித் ஷாவின் ராஜதந்திரம் கை கொடுக்க அங்கேயும் ஆட்சி அமைத்தது பாஜக.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் எக்கு கோட்டையாக இருந்த திரிபுராவை தகர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிகரமாக கொடி நாட்டியது பாரதிய ஜனதா. அமித்ஷாவின் அரசியல் வியூகங்களின் உச்சபட்ச வெற்றி என்றால் அது உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஈட்டிய வெற்றியை குறிப்பிடலாம். உபியில் அசைக்க முடியாத அரசியல் சக்திகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவற்றை அதலபாதாளத்தில் தள்ளி 312 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக. இதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடியை முழு அளவில் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்திய அமித்ஷாவின் தேர்தல் கணக்கு தான்

உத்தராகண்ட் , கோவாவிலும் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா.இப்படி இமாலய வெற்றிகளை ஒருபுறம் ஈட்டினாலும் , சில மாநிலங்களில் அமித் ஷாவின் முயற்சிகள் எடுபடாமல் போனதும் உண்டு. அப்படி மிக மோசமான ஆண்டாக அக்கட்சிக்கு அமைந்தது 2016ஆம் ஆண்டு.தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்ததுடன், நோட்டாவிற்கு கீழான வாக்குகளை பெற்றது.

இதேதான் கேரளாவிலும் நடந்தது. 98 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது.மேற்கு வங்கத்திலும் 294 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 6 மட்டுமே. இந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் அமித்ஷாவின் மிகப்பெரிய தேர்தல் தோல்வியாக பார்க்கப்பட்டது. மொத்தத்தில் தமிழகத்தில், கேரளா, மேற்கு வங்கத்தில் அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தோற்றுப் போனது என்றே கூறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com