”அயோத்தி ராமர் கோவிலை எதிர்ப்பதால் தான்..” பாஜக வெற்றியின் காரணத்தை சொன்ன அமித் ஷா!
அமித் ஷா, காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் செய்து, வாக்கு பெட்டிகளை அபகரித்து வெற்றி பெற்றனர் என குற்றம்சாட்டினார். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்த பிறகு மோசடி செய்ய முடியவில்லை என்பதால், இப்போது புகார் அளிக்கிறார்கள். அயோத்தி ராமர் ஆலயத்தை எதிர்ப்பதால் பாஜக வெற்றி பெறுகிறது எனவும் கூறினார்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பா் 1ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடல் சார்ந்த விவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று வாக்காளர் சீர்திருத்தப்பணிகள் சார்ந்து நடைபெற்ற விவாதத்தில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், முதன்முதலில் வாக்குத்திருட்டு மூலம் பிரதமரானவர் நேரு தான் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்தார். பதிலுக்கு ராகுல் காந்தி ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என சவால் விட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
அமித்ஷா பேசியது என்ன?
காங்கிரஸை விமர்சித்து பேசிய அமித் ஷா, காங்கிரஸ் காலத்தில் வாக்கு பெட்டிகளை அபகரித்துச் சென்று தேர்தலில் வெற்றி பெற்றனர். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்த பிறகு மோசடி செய்ய முடியவில்லை என்பதால், இவர்கள் தற்போது புகார் அளிக்கிறார்கள். மின்னணு வாக்கு இயந்திரங்களை "ஹேக்" செய்து காட்டும்படி பலமுறை தேர்தல் ஆணையம் அழைத்தபோது இவர்கள் செல்லவில்லை. ஊடகங்களில் மட்டுமே புகார் தெரிவிக்கிறார்கள், தேர்தல் ஆணையத்துக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ சென்று குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில்லை என விமர்சித்தார்.
மேலும், தேர்தல் நடவடிக்கை தொடர்பான காணொளிகளை பெறுவதற்கு சட்டரீதியான நடைமுறைகள் உள்ளன. தேர்தல் ஆணையர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்பது ஏற்கனவே சட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்தால், நாங்கள் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். அயோத்தியா ராமர் ஆலயத்தை நீங்கள் எதிர்ப்பதால் நாங்கள் வெற்றி பெறுகிறோம், நீங்கள் CAA நடவடிக்கையை எதிர்ப்பதால் நாங்கள் வெற்றி பெறுகிறோம். நீங்கள் ஊடுருவும் வெளிநாட்டவரை வெளியேற்ற மறுப்பதால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுகிறோம் என பேசினார். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பேசிய அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

