டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா தேசிய செயற்குழுக் கூட்டத்தின் நிறைவாக பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா நம்பிக்கையுடன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக கூறினார். ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக பிரதமர் தெரிவித்தார். முக்கிய விவகாரங்கள், கொள்கைகள், சித்தாந்தங்களில் அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பிற கட்சிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். இதற்கு முன் பேசிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, 2019ம் ஆண்டு தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறும் என்றும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தங்கள் ஆட்சி தொடரும் என்றும் தெரிவித்தார்