‘தேவை என்றால் குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும்’ - அமித் ஷா உறுதி
தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களின் கவலையைப் போக்கும் வகையில் தேவைப்பட்டால் இந்தச் சட்டத்திருத்தத்திலேயே இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மேகாலயா மாநில முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் தன்னை சந்தித்து சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அமித் ஷா தெரிவித்தார். அத்துடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வழியாக இந்த விவகாரத்தில் மேகாலயாவின் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என உறுதி அளித்திருப்பதாகவும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.