முக்கியத் தலைவர்களை சந்திக்கும் அமித் ஷா? பயணத்திட்டம் என்ன?
தமிழகத்துக்கு வருகை தரும் பாஜக மூத்தத் தலைவர் அமித் ஷா பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித்ஷா, இன்று பிற்பகல் 1.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, பிற்பகல்1.55 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ்-க்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.
2 மணி முதல் 4.15 வரை நட்சத்திர விடுதியில், முக்கிய நபர்களை சந்திக்கிறார். மாலை 4.15 மணியளவில் விடுதியில் இருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். 4.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, 61ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்
இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர். பின்னர் கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, 6.15 மணிக்கு லீலா பேலசுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு மாலை 6.20 மணிக்கு பாஜக மாநில நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். பாஜகவின் உயர்மட்ட குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
அன்று இரவு நட்சத்திர விடுதியில் தங்கும் அமித் ஷா, மறுநாள் காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15க்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி, சென்னை விமானநிலையம், கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

