காஷ்மீரில் உயிரிழந்த அதிகாரியின் உறவினரை சந்தித்த அமித் ஷா
ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு நிலவும் சூழல் குறித்தும் அமைதியை நிலை நாட்டுவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அத்துடன் அவர் அங்குள்ள ராணுவ படை தளபதிகள், ஆளுநர் சத்தியபால் மாலிக், ஆளுநரின் ஆலோசகர் விஜய குமார் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து தமது பயணத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி ஹர்ஷத் அகமதுவின் 4 வயது மகன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காவல்துறை அதிகாரி ஹர்ஷத் அகமது உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

