“இந்தி குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” -அமித் ஷா
இந்தி மொழி குறித்த தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமித் ஷா, நாடு முழுவதும் இணைக்கும் மொழி இந்தி எனக் கூறியிருந்தார். இதற்கு இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் ‘பூர்வதயா இந்துஸ்தான்’ என்ற நிகழ்ச்சி ஒன்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்தி தினத்தன்று நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைபடுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.
மேலும் ஒரு குழந்தை தனது தாய்மொழியில் படிக்க தெரிந்தால் மட்டும் தான் சிறப்பாக படிக்க முடியும். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன். மொழிகளை வலிமைப்படுத்த தவறினால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று நமது மொழி எது எனத் தெரியாமலே போய்விடும்
” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.