அமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..!
பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்பி ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா பன்றிக் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமித் ஷா, “ எனக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்கான சிகிச்சையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடவுளின் கருணையாலும் உங்களின் அன்பாலும் விரைவில் மீண்டு வருவேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்பி ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ஹரிபிரசாத் பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்போது, “ அமித் ஷா காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களை கடத்தி மும்பையில் தங்கவைத்திருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் கடத்திய எம்எல்ஏக்களில் சிலர் திரும்பி வந்தது அமித் ஷாவிற்கு பெரும் கவலையை உண்டு பண்ணியது. அந்த கவலையாலேயே காய்ச்சலும் ஏற்பட்டது. அதுவும் வெறும் காய்ச்சல் அல்ல... பெரிய காய்ச்சல் அதாவது பன்றிக் காய்ச்சல். அமித் ஷா இதேபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தால், இதைவிடவும் மோசமாக பாதிக்கப்படுவார்” என தெரிவித்திருந்தார்.
அமித் ஷாவின் உடல்நிலையை குறிவைத்து காங்கிரஸ் எம்பி விமர்சனங்களை முன்வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. ஆனால் கர்நாடகா மாநில பாஜக ஹரிபிரசாத் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. ஹரிபிரசாத் ஒரு ‘மோசக்காரன்’ என்றும் அவரின் மனநிலை இந்த உலகில் அவர் வாழ்வதற்கான தகுதியற்றவர் என்பதை காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். அதேசமயம் கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.