“நான் ஒரு சுதந்திரப் பறவை” - நாடாளுமன்றத்தில் அனல்பறந்த அமித்ஷா பேச்சும், ஓவைசி பதிலும்!

“நான் ஒரு சுதந்திரப் பறவை” - நாடாளுமன்றத்தில் அனல்பறந்த அமித்ஷா பேச்சும், ஓவைசி பதிலும்!
“நான் ஒரு சுதந்திரப் பறவை” - நாடாளுமன்றத்தில் அனல்பறந்த அமித்ஷா பேச்சும், ஓவைசி பதிலும்!

"நான் ஒரு சுதந்திரப் பறவை; ஆகவே எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை" என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அமித் ஷா விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி பரப்புரையை முடித்துவிட்டு தனது காரில் ஒவைசி டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டெல்லி எல்லை அருகே மர்ம நபர்கள் சிலர், அவரது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அதிர்ஷ்டவசமாக ஒவைசியும், அவருடன் இருந்தவர்களும் உயிர் தப்பினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அசாதுதின் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அதனை ஒவைசி ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஒவைசியின் கார் மீது இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் உள்ளனர். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவைசி எங்கு செல்கிறார், சென்று கொண்டிருக்கிறார் என எந்த தகவலும் போலீஸாருக்கு தெரிவிக்கப்படவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில், ஒவைசியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, மத்திய அரசு வழங்கும் இசட் பிரிவு பாதுகாப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் சார்பாக இதனை நான் கேட்டுக்கொள்கிறேன்" என அமித் ஷா கூறினார்.

இதற்கு பதிலளித்த ஒவைசி, "இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அமித் ஷா என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் கூற விரும்புவது என்னவெனில், நான் ஒரு சுதந்திரப் பறவை. என்னை சுற்றி ஆயுதங்களுடன் ஆட்கள் நிற்பதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். அதுமட்டுமின்றி, சிஏஏ போராட்டத்தில் இறந்து போன 22 பேரின் உயிரை விட எனது உயிர் பெரிது இல்லை என நான் நம்புகிறேன். எனவே, இசட் பிரிவு பாதுகாப்பை நான் ஏற்கப்போவதில்லை" என அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com