’வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார்..’ அமித் ஷா குற்றச்சாட்டு! ராகுல் காந்தி சவால்!
முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரே வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பா் 1ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடல் சார்ந்த விவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று வாக்காளர் சீர்திருத்தப்பணிகள் சார்ந்து நடைபெற்ற விவாதத்தில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
மக்களவையில் தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய அமித்ஷா, ”1952 முதல் எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுவருகிறது. 2004ஆம் ஆண்டு வரை எந்தக் கட்சியும் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு நேரு பிரதமராக 2 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராக 28 பேர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், நேருவே பிரதமர் ஆனார். இதுவே வாக்குத்திருட்டு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், இந்திரா காந்தி பிரதமராக தொடர்ந்தது 2ஆவது வாக்குத்திருட்டு. சோனியாகாந்தி 3ஆவது வாக்குத் திருட்டில் ஈடுபட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், வாக்குத் திருட்டு தொடர்பாக விவாதத்திற்கு வருமாறும், ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என்றும் அமித்ஷாவுக்கு சவால் விடுத்தார்..

