பீகார் தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி - விளக்கம் அளித்த பாஜக
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில், “பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம். பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். கூடுதலாக மாநிலத்தில் ஆசிரியர்களை நியமிப்பது, சுகாதாரப்பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது” போன்ற பல வாக்குறுதிகள் அடங்கியுள்ளன.
இதில் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஒரு தொற்றுக்கு அரசு தடுப்பூசி தர வேண்டும் என்பது கடமைதானே தவிர வாக்குறுதி அளித்து செய்யும் விஷயமல்ல என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தொழில்நுட்பக் குழு தலைவர் அமித் மால்வியா, "கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி என்பது பாஜகவின் வாக்குறுதி. மத்திய அரசு தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட வீதம் கொடுக்கும். அதை இலவசமாக கொடுக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட விலைக்கு விற்க வேண்டுமா என்பது மாநில அரசின் முடிவு. பீகார் அரசு அதனை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளது. அவ்வளவுதான்" என தெரிவித்துள்ளார்.