ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தவர்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலர் காயமடைந்தனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது . தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இப்படியான சூழலில், ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கையில், ‘‘பாகிஸ்தான் படைகளின் தயார் நிலை குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், முப்படை தளைபதி ஆகியோர் தங்களின் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், ‘‘பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, ஜம்மு - காஷ்மீரின் உரி, நவுகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த 9 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதுதவிர பாகிஸ்தான் தலைவர்கள் அவ்வப்போது போரைத் தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் இந்த நடவடிக்கை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.