ஊரடங்கால் பூட்டிக்கிடந்த நகைக்கடைக்குள் முட்டைகளுடன் அடைகாத்த மலைப்பாம்பு
கேரளாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால் பூட்டியே கிடந்த நகைக் கடையில் மலைப்பாம்பு ஒன்று குடிபுகுந்தது.
கேரள மாநிலம்கண்ணூரில் உள்ள பையனூர் பகுதியில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பூட்டியிருந்த நகைக் கடையை தூய்மைப்படுத்த திறந்தபோது, அட்டைப் பெட்டியில் மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்க முயன்றபோது, அது முட்டையிட்டு அடைகாத்து வந்தது தெரியவந்தது.
சுமார் மூன்று மீட்டர் நீளமும் 24 கிலோ எடையும் கொண்ட மலை பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர். மலைப்பாம்பு அடைகாத்து வந்த 19 முட்டைகளையும் கைப்பற்றினர். இன்னும் 20 நாட்களுக்கு நகைக் கடை திறக்கப்படாமல் இருந்திருந்தால் கடை மலை பாம்புகளின் புகலிடமாக மாறியிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்