சுட்டெரிக்கும் சூரியன்.. அதிகரிக்கும் வெப்பம் - நாடு முழுவதும் அவதியடையும் மக்கள்

பெரும்பாலான மாநிலங்களில் 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.
Amid Heatwave Warnings
Amid Heatwave WarningsFacebook

இந்தியாவில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். வரும் 23ஆம் தேதி வரை மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியின் முக்கிய வானிலை ஆய்வு நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகும். டெல்லியின் பூசா பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பிடம்புரா பகுதியில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தின் பங்குராவில் அதிகபட்ச வெப்பநிலை 43.7 டிகிரி செல்சியஸும், தலைநகர் கொல்கத்தாவில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியது. ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பமான காலநிலை தொடர்ந்து நிலவுகிறது, மேலும் இரு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் உள்ளது. ஹரியானாவில், ஹிசார் முழுவதும் வெப்ப அலை வீசியது. அங்கு வெப்பநிலை 41.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மற்றும் ஹமிர்பூர் பகுதிகளில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. லக்னோவில் அதிகபட்ச வெப்பநிலையாக 41.3 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 24.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியது.

பாலைவன மாநிலமான ராஜஸ்தானிலும் வெப்பநிலை அதிகரித்து, சித்தோர்கரில் 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து கோட்டா (42.8 டிகிரி), பன்ஸ்வாரா (42.7 டிகிரி), ஃபலோடி (42.2 டிகிரி), டோல்பூர் (42 டிகிரி), அல்வார் மற்றும் சவாய் மாதோபூர் (தலா 41.7 டிகிரி) ), டோங்க் (41.6 டிகிரி), சுரு மற்றும் பிலானி (தலா 41.4 டிகிரி), பார்மர் (41.2 டிகிரி) மற்றும் ஜெய்ப்பூர் (40 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இருப்பினும், ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஜோத்பூர் மற்றும் பிகானர், ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் பரத்பூர் பகுதிகளில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை 2-3 டிகிரி குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கொளுத்தும் கோடை வெயிலால், மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3-4 நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்சம் அல்லது பகல்நேர வெப்பநிலை ஒன்று முதல் நான்கு புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று பாட்னா வானிலை மையம் கணித்துள்ளது. வடக்கு பீகாரில் 40-42 டிகிரி செல்சியஸ் வரையிலும், மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் 42-44 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com