இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - 36 மணி நேரத்தில் திரும்புவதாக தகவல்
இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 36 மணி நேரம் மட்டுமே தங்கியிருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 12 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆஸ்ரமம் வரை, லட்சக்கணக்கனோர் பங்கேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கலைஞர்கள், வழிநெடுக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
அனைத்து பயணங்களையும் முடித்த பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திக்கும் அதிபர் ட்ரம்ப், அங்கு நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதையடுத்து அன்றிரவே அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். மொத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் 36 மணி நேரம் மட்டுமே தங்கியிருக்கிறார்.
இந்தியா வரும் ட்ரம்ப், பாகிஸ்தான் செல்லாமல் நேரடியாக அமெரிக்கா திரும்புகிறார். இது அரசியல் ரீதியாக இந்தியா-பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வகையில் இருக்கிறது என்பதை காட்டுவதாக இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.