ம.பி | நிறுவப்பட்டு 2 நாட்களில் திருடு போன அம்பேத்கர் சிலை!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாரி கிராமத்தில், கடந்த 11ஆம் தேதி அண்ணல் அம்பேத்கருக்கு திறந்த வெளியில் ஒன்றரை அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இது நிறுவப்பட்ட அடுத்த இரண்ரே நாட்களில் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர், "மாவட்ட தலைமையகத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கர்ஹி மல்ஹாரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை திருடப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடிச் சென்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பாரி கிராமத்தின் சர்பஞ்ச் ஆஷாராம் அஹிர்வார், ”கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக நிதி திரட்டி டாக்டர் அம்பேத்கரின் சிலையை உத்தரப்பிரதேசத்திலிருந்து வாங்கி வந்தனர். கல் சிலை 18 அங்குல உயரம் கொண்டது. மார்ச் 11ஆம் தேதி கிராமத்தில் நிறுவப்பட்டது. திருட்டு தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.