அம்பேத்கர் யாருக்கான ஆயுதம்?

பிற்படுத்தப்பட்டோர் என்ற வகையினத்தை உருவாக்கியதும், அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்ததும் அம்பேத்கர்தான்
Ambedkar
Ambedkar Ambedkar

இரு வெவ்வேறு தரப்புகளால் ஒரேநேரத்தில் ஏற்று முன்வைக்கப்படுபவராகவும், யாருக்காக உழைத்தாரோ அவர்களில் கணிசமான மக்களால் நிராகரிக்கப்படுபவராகவும் அம்பேத்கர் இருக்கிறார் என்பது சமகாலத்தின் வரலாற்று நகைமுரண்.

அம்பேத்கரை யாரெல்லாம் ஏற்று முன்வைக்கிறார்கள்? ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்கரை முன்னிறுத்துவதில் ஆச்சர்யமில்லை. ஒடுக்கப்பட்ட சாதியொன்றில் பிறந்து தடைகளைத் தகர்த்து தன் மேதமையால் தன்னை நிறுவி இந்திய அரசியல் சட்டத்தின் குறியீடாகவும் நின்று நிலைத்தவர் அவர். அம்பேத்கரின் எழுத்தில் ஒரே ஒரு பக்கத்தைக்கூட படிக்காத ஒரு தலித் கூட, அவரைத் தன் முன்மாதிரியாகக் கொண்டாலும் அதைப் புரிந்துகொள்ள எந்தத் தடையுமில்லை. ஏனெனில் அறிவும் அதிகாரமும் மறுக்கப்பட்ட சமூகத்தில் சுயமரியாதையின் சின்னம் அவர். இன்னொருபுறம் இத்தகைய போற்றுதல்களுக்கான தகுதி கொஞ்சமும் குறைவானவர் அல்ல அம்பேத்கர்.

ஆசிரியர், கல்லூரி முதல்வர், அரசியல் தலைவர், தொழிற்சங்கத் தலைவர், பொருளியல் நிபுணர், சட்ட அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், கணக்காளர், வழக்கறிஞர், பங்குச் சந்தையின் வர்த்தக ஆலோசகர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார் அவர். இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியான பல பரிமாணங்கள்கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே.

அவரது ஆய்வுப் படிப்பு, ரூபாய் நோட்டுக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்குமான உறவு குறித்தது. பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி நீட்ஷே வரை அவர் விரிவாக எழுதியிருக்கிறார். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு அரசியலில் விரக்தி ஏற்பட்ட காலத்தில் ‘இந்திய ராணுவம்’ குறித்த ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினார் அம்பேத்கர். ‘நீர்ப்பாசனம், மின் ஆற்றல் குறித்த அம்பேத்கரின் எழுத்துகள் முறையாகத் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை. எனவே இத்தகைய விரிவும் ஆழமும் கொண்ட மேதையான அம்பேத்கர் எப்போதும் தன் மக்களின் விடுதலை குறித்தே சிந்தித்தார். அவர் நினைத்திருந்தால் தன் மேதமையைப் பயன்படுத்தி சொந்த வாழ்வில் எவ்வளவோ லாபங்களை அடைந்திருக்க முடியும். ஆனால் இழப்புகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்துத்தான் அவர் ஒடுக்கப்பட்ட தன் மக்களின் பக்கம் நின்றார். எனவேதான் அம்பேத்கர் என்ற அடையாளம் விடுதலையின் அடையாளமாக மாறியிருக்கிறது.

மறுபுறம் ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாது ஆதிக்கசாதியில் பிறந்தாலும் சாதியற்ற சமூகம் அடைய விரும்புபவர்களும் அம்பேத்கரைத் தன் கைவிளக்காக ஏந்துகின்றனர். ஏனெனில் அவர் சாதி குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்ததுடன் சாதி ஒழிப்புக்கான வழிமுறைகள் குறித்து செயல்திட்டங்களை உருவாக்கியவர். அவருடைய முதல்நூலான ‘இந்தியாவில் சாதிகள்’ 1916ல் வெளியானது. நூற்றாண்டு கடந்த அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகள் சமகாலத்திலும் சாதியைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

சாதியின் தோற்றம் என்ன என்பதற்கு ஆய்வாளர்கள் முன்வைக்கும் பல கருத்துகளைப் பரிசீலிக்கும் அம்பேத்கர், அவற்றை நிராகரித்து சாதி உருவாகுவதற்கும் நிலைபெறுவதற்கும் ஒரே சாதிக்குள் நடைபெறும் திருமணங்கள், அகமணமுறையே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் சாதித்தூய்மையைக் காப்பாற்றும் பொறுப்பு பெண்களின் தலையிலேயே சுமத்தப்பட்டது என்கிறார். குடும்பத்துக்கும் தனிச்சொத்துக்கும் இடையிலான உறவை மார்க்சியம் ஆராய்ந்ததைப் போல, குடும்பம், திருமண உறவுகளுக்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவுகளை அம்பேத்கர் ஆராய்ந்து முன்வைத்தார். சாதித்தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய ‘கடமை’யுள்ள பெண்கள், அந்தப் பொறுப்பில் இருந்து நழுவிவிடக்கூடாது என்பதற்காகவே சதி என்னும் உடன்கட்டை, குழந்தைத் திருமணம், விதவை மணமறுப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்கிறார்.

ஒரு வர்க்கத்தில் பிறந்த ஒருவர் தான் விரும்பினாலோ சூழல் காரணமாகவோ தன் வர்க்கத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே ’சாதி என்பது தனக்குத்தானே கதவடைத்துக்கொண்ட வர்க்கம்’ என்று விளக்கினார் அம்பேத்கர். இப்படி முதன்முதலாகத் தனக்குத்தானே கதவடைத்துக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டும் அம்பேத்கர், மற்ற சாதியினரும் ‘போலச்செய்தல்’ மூலம் பார்ப்பனர்கள் போல் தங்களுக்குத் தாங்களே கதவடைத்துக்கொண்டதால் சாதி நிலைபெற்றது என்றார். இப்போதும் இத்தகைய கதவடைப்புக்காகத்தான் சாதிமறுப்புத் திருமணங்களைச் சாதியச் சங்கங்களும் சாதியத் தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பதுடன் ஆணவக்கொலைகளையும் ஆதரிக்கின்றனர்.

பிரெஞ்சுப்புரட்சி தந்த விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்பீடுகளின் வழியே இந்துமதத்தை ஆராய்ந்த அம்பேத்கர், “எல்லா மதங்களும் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்லின. ஆனால் இந்துமதம் மட்டும்தான் கடவுள் ஒரு மனிதரை நெற்றியில் இருந்தும் இன்னொரு மனிதரைக் காலில் இருந்தும் படைத்ததாகச் சொல்கிறது” என்றார். ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதி எவ்வளவுதூரம் விலகியிருக்க வேண்டும் என்பதை வரையறுக்கும் மனுநீதி உள்ளிட்ட நூல்களே சட்டத்தொகுப்புகளாக விளங்கின என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உணவுப்பொருள்கள், பாத்திரங்கள் உள்பட எல்லாவற்றிலும் சாதியமும் தீண்டாமையும் தொழிற்பட்டதையும் அவர் விளக்கினார். சாதி என்பது வெறுமனே ஒடுக்குபவர், ஒடுக்கப்படுபவர் என்னும் நிலைகளில் இருந்தால் அது எப்போதோ ஒழிந்திருக்கும்; ஆனால் அது செங்குத்தான படிநிலையைக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்படும் ஒவ்வொரு சாதிக்கும் அது ஒடுக்குவதற்கான இன்னொரு சாதியும் இருக்கிறது. ஒரேநேரத்தில் ஒருவர் ஒடுக்கப்படுபவராகவும் ஒடுக்குபவராகவும் இருக்கிறார். எனவே இன்னொருவரை ஒடுக்கும் அதிகாரவெறியும் சுயதிருப்தியும் சாதியை அழியாமல் காப்பாற்றுகிறது. ‘’இந்துமதம் என்பது படிகள் இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு. ஒருவர் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல முடியாது” என்றார்.

அம்பேத்கரின் இதே குரலைத் தென்னிந்தியாவில் எதிரொலித்தவராக இருந்தார் பெரியார். அதனால்தான் அவர் அம்பேத்கரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ஆதரித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள்மீது வன்முறை ஏவப்படும்போதெல்லாம் அதுகுறித்த செய்திகளைப் பதிவு செய்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுசிறு இயக்கங்களின் சிறுசிறு நிகழ்வுகள், அசைவுகளையும்கூட தன் இதழ்களில் பதிவு செய்து ஆதரித்து வரவேற்றார். அவர்வழியில் பெரியாரிஸ்ட்கள் இன்றும் அம்பேத்கரைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்கின்றனர்.

கம்யூனிஸ்ட்களுக்கும் அம்பேத்கருக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. இன்றளவும்கூட அம்பேத்கரியம் மார்க்சியமும் இணையமுடியாத புள்ளிகள் உண்டுதான். களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைத்த இடதுசாரிகள், கருத்தியல்தளத்தில் அம்பேத்கரையும் பெரியாரையும் மறுத்தனர். ஆனால் காலப்போக்கில் தங்கள் வர்க்கப்பார்வையுடன் அம்பேத்கரையும் பெரியாரையும் இணைக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே கறுப்பு-சிவப்பு-நீலம் இணைந்த கூட்டணி என்பது இன்று வலுவானதாக உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரியவாதிகள், மார்க்சியர்கள், பெண்ணியவாதிகள் ஆகியோர் அம்பேத்கரை ஏற்று முன்வைப்பது வரலாற்றில் இயல்பானது; புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் இன்னொருபுறம் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும்கூட அம்பேத்கரைப் ‘பயன்படுத்த’ முயல்வதுதான் எச்சரிக்கையுடன் விவாதிக்க வேண்டிய புள்ளி.

அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் எந்தச் சனாதனத்தையும் சாதியையும் எதிர்த்தாரோ அந்தச் சனாதனத்தையும் சாதியத்தையும் ஏற்றுக்கொள்பவர்களும் அம்பேத்கரை முன்னிறுத்துகின்றனர். மாநில அரசுகளுக்கான அதிகார வரம்புகள், மொழிவாரி மாநிலங்கள், காஷ்மீர் பிரச்னை, பொது சிவில் சட்டம், பாகிஸ்தான் பிரிவினை, இந்தி மொழி ஆகியவை குறித்த அம்பேத்கரின் கருத்துகளை அதன் பின்னணியிலிருந்து பிய்த்தெடுத்து, தங்களுக்கு வசதியான ஒரு ‘பாரதியத் தலைவராக’ அவரை உருவாக்கிக்கொள்கின்றனர். அம்பேத்கரை ஓர் இந்துத்துவத் தலைவராக முன்னிறுத்துவதன் மூலம், தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்குமான மோதல்களை உருவாக்குவது என்பதும் இந்துத்துவ அரசியலின் ஒரு பணி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர். ஆனால் மதவாதப் பிளவரசியலை முன்னெடுப்பவர்கள், கும்பல் கொலைகளை நிகழ்த்துபவர்களும் அம்பேத்கரை முன்னிறுத்துகின்றனர். ரிசர்வ் வங்கியை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் ரிசர்வ் வங்கி, நீதித்துறை, விசாரணை அமைப்புகள் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சுயச்சார்பை அழித்து அதை தங்களின் ஏவல்துறையாக மாற்றும் பா.ஜ.க அம்பேத்கரை முன்னிறுத்துகிறது. ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது’ என்ற அம்பேத்கரை, ‘உயர்சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ தந்த பா.ஜ.க முன்னிறுத்துகிறது. தொழிலாளர் நலச்சட்டங்களை உருவாக்கியவர், பொதுத்துறை நிறுவனங்களை ஆதரித்தவர் அம்பேத்கர். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை மதிப்பிழக்க வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் துணைபோகும் பா.ஜ.க அரசு அம்பேத்கரை முன்னிறுத்துகிறது. சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கரின் அத்தனைக் கொள்கைகளையும் குழிதோண்டிப் புதைத்த நரேந்திரமோடி ‘’நான் இந்த இடத்துக்கு வந்ததற்குக் காரணமே அம்பேத்கர்தான்” என்று புகழ்கிறார். காரணம் என்ன? எப்படி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் பங்கை மறுத்துவிட்டு, அவர்களில் ஒருசிலருக்குப் பதவிகளைக் கொடுத்துவிட்டு அதையே தங்கள் சாதனையாக முன்னிறுத்துகிறார்களோ அதைப்போல் அம்பேத்கரின் கனவுகளுக்கும் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராக இருந்தபடி அவரை வெறுமனே பிம்பமாக முன்னிறுத்தி, தங்கள் அடையாளமாகக் காட்ட முயல்கிறார்கள். இது அம்பேத்கருக்குச் செய்யும் துரோகம். இதேபோன்ற இன்னொரு துரோகமும் அம்பேத்கர் பெயரை முன்வைத்து நடப்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றும் இந்தியளவில் நீதித்துறை, உளவு அமைப்புகள், மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், உயர்கல்வித்துறை, வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, ஊடகங்கள் போன்ற பலதளங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் குறையவில்லை. இந்திய அரசியலின் அசைவுகளையும் சமூக பொருளாதாரச் சூழலையும் தீர்மானிப்பவர்களாக அவர்களே உள்ளனர். அதேநேரத்தில் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் பார்ப்பன அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்குப் பதிலாக அதிகாரத்துக்கு வந்த இடைநிலைச் சாதிகள் தலித்துகள் மீது வன்முறையையும் ஒடுக்குமுறையையும் ஏவுபவர்களாக இருக்கின்றனர். தலித்துகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறியாமையும் அநீயுமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். ஆணவக்கொலைகளும் வெவ்வேறு வடிவங்களில் தீண்டாமைகளும் தொடர்கின்றன.

முன்பிருந்ததைவிட தலித் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் முன்னேறினாலும் தலித் அல்லாதாருடன் ஒப்பிடும்போது அது மிகமிகக்குறைவுதான். அப்படி முன்னேறிய தலித்துகளையும் தங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இடைநிலைச்சாதியினர் பார்ப்பதால் சாதிய முரண்கள் கூர்மையுடைந்துள்ளன. இந்தச் சூழலை எதிர்கொள்வதில் திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இருக்கும் போதாமைகளை சில தலித் அறிவுஜீவிகள் விமர்சிக்கின்றனர். சிலர் விமர்சனங்களுடனே சாதிக்கும் மதவாதத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஜனநாயகச் சக்திகளுடன் இணைந்து செயற்படுகின்றனர். சிலரோ தலித்துகளை ஒட்டுமொத்தமாகத் தனிமைப்படுத்தும் விலகல்வாதத்தை முன்வைக்கின்றனர். பிறகு அது குறுகிய சாதியவாதமாக மாறி, ஒடுக்கப்பட்ட பிற சாதிகளிடம் இருந்து விலகி தங்கள் சாதியை மட்டும் முன்னிறுத்தும் சாதிப்பற்றாளர் என்ற நிலைக்குச் செல்கிறது.

இந்த விமர்சனங்களில் உள்ள நியாயங்களைப் புறம்தள்ளி, அதன் விமர்சனத்தன்மையை மட்டும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள பார்ப்பனர்களும் பிற்போக்குவாதிகளும் முனைகின்றனர். ‘பார்ப்பனர்களுக்கும் சாதியத்துக்கும் தொடர்பில்லை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதே இடைநிலைச் சாதிவெறியை மறைக்கத்தான், திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட்களும்தான் தலித் விரோதிகள்’ என்னும் பிரச்சாரத்தை இவர்கள் முன்னெடுக்கின்றனர். திராவிட, கம்யூனிச வெறுப்பாளர்களாக உள்ள பார்ப்பனரல்லாதாரும் இந்தப் பிரச்சாரத்தில் இணைகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் சாதிக்கு எதிராக எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை. தன் சொந்தச் சாதிக்குள் திருமணம் செய்துகொள்வது முதல் எல்லாவற்றையும் மேற்கொள்ளும் இவர்கள் இடைநிலைச்சாதிவெறியை விமர்சிப்பது, கம்யூனிஸ்ட்கள், திராவிட இயக்கத்தின்மீது வெறுப்பைக் கக்குவது ஆகியவற்றின் மூலமே ‘திடீர் தலித் ஆதரவாளர்’ ஆகிவிடுகின்றனர். தங்கள் கயமையை மறைக்கும் தந்திரத்துக்கு அம்பேத்கரை முன்னிறுத்தவும் இவர்கள் தயங்குவதில்லை.

அதேநேரத்தில் இடைநிலைச்சாதிகளின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நிற்கவேண்டியது ஜனநாயகவாதிகளின் கடமை. பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சாதிக்கு எதிரான தொடர் உரையாடலை நிகழ்த்தவேண்டும். பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தி இதை ஓரளவு செய்ய முயன்றார். இந்துமதம், சாதியம், தீண்டாமை குறித்த அம்பேத்கரின் கருத்துகளுக்குக் காந்தியால் வந்துசேர முடியவில்லை என்றாலும் மனிதநேயம், அறம் ஆகியவற்றின் அடிப்படையில் தலித் அல்லாதாரிடம் குற்றவுணர்வை உருவாக்க முயன்றார்.

சாதி ஒழிப்பில் அம்பேத்கரைப் போலவே ஒத்த சிந்தனைகொண்ட பெரியார் சூத்திரர்களான இடைநிலைச்சாதியினரிடம் சாதி ஒழிப்புக்கான உரையாடல்களில் ஈடுபட்டார். ’ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி இழிவைவிட சூத்திரர்கள் என்ற அடையாளம் அவமானகரமானது’ என்று சொன்னதன் மூலம் அவர் இடைநிலைச்சாதியினரால் வன்முறைத் தாக்குதல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானார். ‘பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரப்பட்டம் ஒழியும் என்று கருதினால் நீங்கள் வடிகட்டின முட்டாள்கள்’ என்று கடுமையாக விமர்சித்தார். சாதிச்சங்க மாநாடுகளில் கலந்துகொண்டு அவர்கள் சத்திரியர்கள், வைசியர்கள் பட்டங்களைச் சூட்டியதையும் கடுமையாக விமர்சித்தார். ‘நீங்கள் உங்கள் உரிமைகளை முன்வைக்க சாதிச்சங்கம் அமைப்பதில் தவறில்லை. ஆனால் நீங்கள் எப்படி உங்களுக்கு மேலான சாதியில்லை என்று சொல்கிறீர்களோ அதுபோல் உங்களுக்குக் கீழும் சாதியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். இப்படியான உரையாடல்களை மேற்கொள்வதில் பெரியாருக்குப் பிறகு இடைவெளியிருப்பது உண்மை. அதை உடைக்கவேண்டிய கடமை சாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள எல்லோருக்குமே இருக்கிறது. ‘இட ஒதுக்கீடு என்பது தலித்துகளுக்கு மட்டுமானதில்லை. பிற்படுத்தப்பட்டவர்களின் இன்றைய முன்னேற்றத்துக் காரணமே இட ஒதுக்கீடுதான்’, ‘பிற்படுத்தப்பட்டோர் என்ற வகையினத்தை உருவாக்கியதும், அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்ததும் அம்பேத்கர்தான்’, ‘பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷன் செயற்படாமல் இருந்ததைத் தன் பதவி விலகல் கடிதத்தில் கடுமையாகக் கண்டித்தவர் அம்பேத்கர்’ போன்ற உண்மைகள் அவர்களிடம் கொண்டுசேர்க்கப்பட வேண்டும்.

தலித் மக்கள் முன்னேறவும் சாதியை ஒழிக்கவும் சட்டங்களும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முக்கியம் என்றாலும் அதுமட்டுமே போதுமானதில்லை. ஏனெனில் ‘அரசியல் ஜனநாயகத்தைப் போலவே சமூக ஜனநாயகமும் முக்கியம்’ என்றவர் அம்பேத்கர். இந்த சமூக ஜனநாயகத்தை உருவாக்க வெறுமனே சட்டங்களாலும் அரசியல் அதிகாரத்தாலும் மட்டுமே சாத்தியமில்லை. ஏனெனில் ‘சாதி என்பது ஒரு மனநிலை’ என்றார் அம்பேத்கர். இத்தகைய மனநிலை ஒழியாமல் சாதி ஒழியாது.

இத்தகைய ‘மனநிலை’ பண்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது. பெண்களை எடுத்துக்கொள்வோம். யாரும் நிர்ப்பந்திக்காமலே அவர்கள் மாதவிடாய்க் காலங்களில் தங்களைத் ‘தீட்டுப்பட்டவர்களாக’ உணர்கின்றனர்; மதச்சடங்குகளில் இருந்து தங்களை விலக்கிக்கொள்கின்றனர். இத்தகைய மனநிலைதான் சாதியையும் தீண்டாமையையும் கட்டமைக்கிறது. இயற்கையான நிகழ்வான மாதவிடாய் தீட்டாக மாறியதைப்போல்தான், உழைக்கும் மக்கள் தீண்டப்படாதவர்களாக மாற்றப்பட்டனர். இத்தகைய ‘தீட்டு’ கருத்தாக்கத்துக்கு இந்துமத சாஸ்திரங்களும் புனிதக் கற்பிதங்களுமே அடிப்படை.
அதனால்தான் 1930களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் புனிதத்தைக் கட்டவிழ்த்து, பண்பாட்டுரீதியில் பல கேள்விகளை எழுப்பியது. பெண்கல்வி, விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் ஆகியவற்றை மட்டுமே சீர்திருத்தவாதிகள் வலியுறுத்தியபோது இதுமட்டுமே போதாது, உடல்ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய வேண்டும் என்று பண்பாட்டுரீதியிலான மாற்றங்களையும் முன்வைத்தனர். கெடுவாய்ப்பாக இத்தகைய பண்பாட்டு உரையாடல்களை நீட்டித்து சாதியம், மதம், ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளை அம்பலப்படுத்த பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்கள் தவறிவிட்டன. சாதி என்னும் ‘மனநிலை’யை மாற்றவும் அதனுடன் இணைந்து எல்லாவகையான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பவும் பரப்புரைகளும் பொதுவெளியில் உரையாடல்களும் அவசியம்.

அதற்கான ஆயுதமே அம்பேத்கர். அந்த ஆயுதத்தைத் தூக்கிப்பிடிப்பது மட்டுமல்ல, சாதிய, மதவாதச் சக்திகள் அம்பேத்கர் ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பதும் நம் கடமை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com