தேசிய கொடி நிறத்தில் மிதியடி... வருத்தம் தெரிவித்தது அமேசான் நிறுவனம்
இந்திய தேசிய கொடி வடிவில் போடப்பட்ட மிதியடி சம்பவம் தொடர்பாக அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அமேசான் நிறுவனத்தின் துணைத்தலைவரும், இந்திய பிரிவு மேலாளருமான அமித் அகர்வால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய தேசிய கொடி நிறத்திலான பொருட்களை அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையத்தில் விற்பனைக்கு வைத்தது நிறுவனம் அல்ல. வேறு ஒரு விற்பனையாளரே. இதுகுறித்த தகவல் கிடைத்த உடனே அந்த பொருட்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் வண்ணம் விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமேசான் நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களின் உணர்வுகளையும், சட்ட திட்டங்கள் மீதும் அமேசான் நிறுவனம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், தேசிய கொடி வடிவில் உள்ள பொருட்களை உடனடியாக நீக்க வேண்டும். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும். இல்லாவிடில், அமேசான் நிர்வாகிகளுக்கு இந்திய விசா வழங்கப்படாது என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.