பனி லிங்க தரிசனம் ! அமர்நாத் யாத்திரை தொடங்கியது
அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜம்முவிலிருந்து இன்று துவங்கியது.
ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் ஆலோசகரான விஜய் குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஏற்கெனவே பதிவு செய்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த யாத்ரீகர்கள், பலத்த பாதுகாப்புடன் குகை கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்டனர். இதுவரை, ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர், அமர்நாத் யாத்திரைக்காக பதிவு செய்துள்ளனர்.
முதல் கட்ட பயணத்திற்கான யாத்ரீகர்கள் ஜம்முவின் மலை அடிவாரத்தில் உள்ள அரசு முகாம்களில் இருந்து புறப்பட்டனர். அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும், பாதுகாப்பு படை வாகனங்கள் சென்றன. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மாநில போலீசார், ராணுவம், துணை ராணுவப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.