\
Amarinder Singh Raja Warring Quits Who’s Next Punjab Congress chief
Amarinder Singh Raja WarringANI

பதவி விலகிய ராஜா வாரிங்.. அடுத்த தலைவர் யார்? குழப்பத்தில் காங்.. பரபரக்கும் பஞ்சாப்!

ஜாட் சீக்கியரான வாரிங்கிற்குப் பதிலாக விஜய் இந்தர் சிங்லா என்ற இந்து முகத்தை நியமிப்பதா அல்லது மாநிலப் பிரிவின் தலைமைப் பதவியில் ஒரு ஜாட் சீக்கியரையே தொடர்வதா என்பதே காங்கிரஸின் பெரும் கேள்வியாக உள்ளது.
Published on: 
Summary

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அமரிந்தர் சிங் ராஜா வாரிங் தனது பதவியிலிருந்து விலகியிருப்பது காங்கிரஸில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், ராஜா வாரிங் தொடர்ந்து மாநிலத் தலைவராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சச்சின் பைலட், மாநிலத்தில் கட்சி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு மதிப்பீட்டு அறிக்கை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தேர்தலைச் சந்திப்பதற்கு முன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங் தானாக முன்வந்து பதவி விலகியுள்ளார்.

Amarinder Singh Raja Warring
Amarinder Singh Raja WarringANI

இன்னும் சொல்லப்போனால், ராஜா வாரிங் மற்றும் சரண்ஜித் சிங் சன்னி தரப்புகளுக்கு இடையே நிலவி வந்த நீண்டகால கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இந்தத் தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது. தனது ராஜினாமா குறித்துப் பேசிய ராஜா வாரிங், "யாரும் எப்போதும் ஒரே பதவியில் நீடிக்க முடியாது; கட்சியின் தொண்டனாகத் தொடர்ந்து இயங்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் ராஜா வாரிங் விலகியதை அடுத்து, காங்கிரஸ் மேலிடம் தற்போது ஒரு புதிய தலைவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. தவிர, சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு விரிவான தேர்தல் வியூகத்தையும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த தலைவருக்கு பல்வேறு பெயர்கள் அடிபடுகின்றன. அதில் முன்னாள் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பர்கத் சிங், முன்னாள் துணை முதல்வர் சுகிந்தர் சிங் ரந்தாவா, முன்னாள் சபாநாயகர்.ராணா கே.பி. சிங் மற்றும் சுகிந்தர் சிங் சர்க்காரியா ஆகியோர் விவாதிக்கப்படும் ஜாட் சீக்கியப் பெயர்களில் அடங்குவர்.

vijay inder singla
vijay inder singlaANI

இவர்களில், ஜாட் சீக்கியரான வாரிங்கிற்குப் பதிலாக விஜய் இந்தர் சிங்லா என்ற இந்து முகத்தை நியமிப்பதா அல்லது மாநிலப் பிரிவின் தலைமைப் பதவியில் ஒரு ஜாட் சீக்கியரையே தொடர்வதா என்பதே காங்கிரஸின் பெரும் கேள்வியாக உள்ளது.

எனினும், மூன்றில் ஒரு பங்கு கொண்ட இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், இந்த வரையறை சில சமயங்களில் இந்து-சீக்கிய சமநிலையாகவும் பார்க்கப்படுகிறது. காரணம், சீக்கியர்களின் வாக்குகளைத் தவிர இந்துக்களின் வாக்குகளையும் காங்கிரஸ் எதிர்நோக்குகிறது. இன்னொரு புறம், ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி தனது மாநிலத் தலைவராக அமன் அரோரா என்ற இந்து முகத்தை நியமித்துள்ளது. இது அக்கட்சிக்கு சமூகச் சமநிலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகையால், இந்தப் பட்டியலில் பனியா சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா ஒரு முக்கியப் போட்டியாளராக உருவெடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தற்போதைய ஜலந்தர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி உள்ளார். இவருக்கு பட்டியலின சமூக வாக்குகளைக் கவரும் வகையில் வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை, இவர்கள் தேர்வு செய்யப்படாதபோது ஜாட் சீக்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com