கும்பமேளாவில் பெண்கள் புனித நீராடுவதை புகைப்படம் எடுக்க தடை
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பெண்கள் புனித நீராடுவதை புகைப்படம் எடுத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15-ம் தேதி கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. கும்பமேளாவில் நீராடுவதற்காக பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நாக சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வருகின்றனர். இதன்படி நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே நாளை வசந்த பஞ்சமியை முன்னிட்டு கும்பமேளாவில் சுமார் 2 கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக கருதப்படும் வசந்த பஞ்சமியன்று வடமாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் விடுமுறை நாளான நாளை வசந்த பஞ்சமி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கும்பமேளா விழா அதிகாரி விஜய் கிரன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலக் காவல்துறை மட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்பு வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கும்பமேளாவில் பெண்கள் புனித நீராடுவதை புகைப்படம் எடுத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் நீதிமன்றமே தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.