"முன் அனுமதி பெறாத நிகழ்ச்சிகளை நீக்குக" - நமோ தொலைக்காட்சிக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
ஒப்புதல் இன்றி எந்த அரசியல் நிகழ்ச்சிகளையும் நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பக் கூடாது என பாரதிய ஜனதாவுக்கு டெல்லி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த மாதம் 31ம் தேதி ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜகவின் நிதியுதவிடன் செயல்படும் நமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும், டெல்லி ஊடக ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு குழுவினரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்பப்படவேண்டும் என தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இதையடுத்து முன் அனுமதி பெறப்படாத அனைத்து நிகழ்ச்சிகளையும் நமோ தொலைக்காட்சியிலிருந்து நீக்கும்படி பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் நமோ டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்காணிக்க இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதை முறைப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.