நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றப்படும் தகவல்களை பார்க்கவும் சிபிஐ உள்ளிட்ட10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இப்போது கணினி இல்லாமல் எந்த வேலையும் ஓடாது. வீடுகள், அலுவலகங்கள் என அனைத்தையும் கணினிகளே ஆக்கிரமித்துள்ளன. தனிப்பட்ட விவரங்களையும் அவரவர் கணினியில் நாம் சேமித்து வைத்திருப்போம். இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, உளவுத்துறை, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய விசாரணை குழு, ரா பிரிவு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளால் எந்த கணினியில் சேகரிக்கப்படும் விவரங்களையும், பரிமாறப்படும் தகவல்களையும் பெற முடியும்.
கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர், இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தனி மனிதனின் தனிப்பட்ட விவரங்கள் இதன்மூலம் வேவு பார்க்கப்படுகிறதா..? என்ற கருத்துகளும் எழத் தொடங்கியுள்ளன.