ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!
ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ளது புகழ்பெற்ற மெக்கா மசூதி. கடந்த 2007-ம் ஆண்டு இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் சவுத்ரி உட்பட 8 பேர் இவ்வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தண்டனையை நீதிமன்றம் இன்று வழங்கியது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். பின்னர் உரிய ஆதாரங்கள் இல்லாததால் 5 பேரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
(அசீமானந்த்)
மற்ற 3 குற்றவாளிகளில், சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டாங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்ரா இரண்டு பேரும் தப்பி வருகின்றனர். அவர்களை இன்னும் பிடிக்க முடியவில்லை.