ஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்

ஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்
ஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்

ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விமானத்தின் பகுதிகள் கண்டிபிடிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியை இன்று தேடுதல் பணியாளர்கள் சென்றடைந்தனர். இந்தச் சூழலில் தற்போது விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே பயணித்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை கூறியுள்ளது. 

ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பிய ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 21 பேரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏஎன்-32 ரக விமானம் அருணாச்சலப் பிரதேசத்தின் ரின்சி மலைப்பகுதிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com