காவலர்கள், ஊர் மக்களுக்கிடையே பயங்கர மோதல் - கலவரமான கிராமம்
உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கான கால நேரமும் பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புஜ்புரா பகுதியில் காய்கறி விற்பதற்கான நேரமானது காலை ஆறு மணியிலிருந்து 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை காவலர்கள் விதிகளின் படி கடைகள் மூடப்படுகிறதா என்பதை சோதனை செய்ய அங்கு வந்துள்ளனர்
அப்போது தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்கள் விலை நிர்ணயம் குறித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மோதலை தடுக்க முற்பட்டனர். இதில் உள்ளூரில் வசிக்கும் ஒரு குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது உள்ளூர் மக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதில் ஒரு காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களும் உள்ளூர் மக்களை விரட்டியடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.