கேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம்

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம்

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை: மக்கள் அச்சம்
Published on

நூற்றாண்டு ‌காணாத வெள்ளத்தாலும், தொடர் மழையாலும் கலங்கிப்போயிருக்கிறது கேரளா. 

திருச்சூரின் நன்மணிக்கரை பஞ்சாயத்து முழுவதும் வெள்ளத்தில் இருக்கிறது. 700 குடும்பங்களைச்சேர்ந்த 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டின் மேற்கூரை வரை தண்ணீர் நிற்கிறது. 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததாலும், அணைகள் திறந்துவிடப்பட்டதாலும் வீடுகள், விளைநிலங்கள் மூழ்கிவிட்டன. இதனால் நன்மணிக்கரையும், திருச்சூரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. முகாம்களுக்கு சிலர் அனுப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். 

கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, உள்ளிட்ட மாவட்டங்களை கனமழையும், வெள்ளமும் தண்ணீர் காடாக மாற்றியிருக்கின்றன. பத்தனம்திட்டாவின் செங்கன்னூர், திருச்சூரின் சாலக்குடி, எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. செங்கனூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை படகுகள், மரக்கட்டைகளால் ஆன மிதவைகளில் சென்று தன்னார்வலர்களும், ராணுவத்தினரும், மீட்புக்குழுவினரும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் சூழாத பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதும் தட்டுப்பாடாக உள்ளது. கட்டப்பனா என்ற இடத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்காக கொட்டும் மழையிலும் ம‌க்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை இருக்கிறது. இதற்கிடையே 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உணவு, மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

கேரளத்தின் அனைத்து நதிகளும் பெருக்கெடுத்து மாநிலத்தையே வெள்ளக்காடாக மாற்றி துயரக்கடலில் ஆழ்த்தியுள்ளது. இச்சூழலில் மேலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com