“காதல் மனைவி தினமும் குடிபோதையில் அடிக்கிறார்” போலீஸில் பாதுகாப்பு கேட்ட கணவன்
அஹமதாபாத்தில் கோக்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிநகர் பகுதியில் 29 வயதான நபர் ஒருவர் தனது மனைவி தினமும் குடித்துவிட்டு போதையில் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி போதைக்கு அடிமையானவர் என்று தனக்கு தெரியாது என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். தன்னை துன்புறுத்துவதுடன் தனது பெற்றோரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு துன்புறுத்துவதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார். குடித்துவிட்டு தான் வேலை செய்யும் இடத்திற்கும் வந்து கூச்சல்போட்டு அசிங்கப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
இதுதவிர, வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார். ஜூன் மாதம் பெற்றோருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் அவர்களுக்கு உதவவேண்டும் எனக் கூறி தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் தனது பெற்றோருக்கு உதவிசெய்யாமல் வீட்டை தனது பேரில் மாற்றி எழுதித்தர வேண்டும் எனக் கேட்டு துன்புறுத்தி இருக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோக்ரா காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக அந்த பெண் புகார் கொடுத்திருக்கிறார். தற்போது செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னை கொடூரமாகக் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்திருக்கிறார்.
இதனால் அந்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரித்ததில், அந்த பெண்தான் தினமும் குடித்துவிட்டு தன்னையும், தன் பெற்றோரையும் கொடுமைப்படுத்துவதாக அந்த நபர் பரிதாபமாகக் கூறியிருக்கிறார். குடித்துவிட்டு, பெண்கள் உதவி எண்ணுக்கு அழைத்து பொய் புகார்களை அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் தனக்கு பாதுகாப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.