குடிநீர் பைப்பில் வந்த மது - கேரளாவில் அதிர்ச்சி
தான் மட்டும் எம்.எல்.ஏ.வானால் மக்களுக்கு குடிநீர் குழாய் வழியாக சாராய விநியோகம் செய்வேன் என தாமிரபரணி படத்தில் கஞ்சா கருப்பு காமெடியாக சொல்லுவார். ஆனால் அதற்கும் வாய்ப்பிருக்கு என்ற வகையில் கேரளாவில் நடந்துள்ளது இந்த சம்பவம்.
கேரளா மாநிலம் திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர் ஜோசி. அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இன்று காலை தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப மோட்டாரை ஆன் செய்துள்ளார். சற்று நேரத்தில் பலரும் அவரிடம் வந்து தண்ணீரில் மது வாசம் வருவதாக சொல்லியுள்ளனர். ஜோஸ் குழப்பமடைந்து, தண்ணீர் குழாயை திறந்து முகர்ந்து பார்க்க, மது வாசம் வருவது உறுதியானது.
தண்ணீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் மது கலந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து சோதனையிட்ட போது, கிணற்றில் இருந்து மது வாடை வந்தது உறுதியானது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து 18 குடும்பங்களுக்கு தேவையான தண்ணீர் தற்காலிகமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
விரிவான விசாரணை மேற்கொண்ட போலீசார் இதற்கு கலால் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்பதை கண்டறிந்தனர். அதாவது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குடியிருப்பின் அருகில் இருந்த ஒரு “பார்” சட்டவிரோதமாக நடந்து வந்ததை கண்டறித்து அதற்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட சுமார் 6000 லிட்டர் மதுவை, வழக்கம் போல் குழி தோண்டி அதில் ஊற்றிவிட்டனர்.
அதிகாரிகள் தோண்டிய குழி, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கிணற்றுக்கு அருகில் இருந்துள்ளது. ஆனால், சுற்றுச்சுவர் இருந்ததால் அவர்களுக்கு கிணறு இருந்தது தெரியவில்லை. காவல்துறை விசாரணையில் மதுவை ஊற்றியது கண்டறியப்பட்டதோடு, மூட்டை மூட்டைகளாய் மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. கலால் அதிகாரிகள் மீது உரிய நடடிக்கை எடுப்பதோடு, 18 குடும்பங்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாயில் திடீரென மது வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.