காங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி

காங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி

காங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி
Published on

தமிழக அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்க, வட இந்தியாவிலும் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 இடங்களையும் எந்தக் கட்சி பெறுமோ, அவர்களோ இந்திய அளவில் தனிப்பெரும் கட்சியாக மாறி ஆட்சி அமைப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் இம்முறை அத்தகைய சூழலுக்கான வாய்ப்பை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி மாற்றும் முனைப்பில் களம் இறங்கியுள்ளன. உ.பி.யில் இதுவரை தனித்து போட்டியிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வழிவிட்டு வந்த இருவரும் தற்போது கூட்டணி அமைத்து செக் வைத்துள்ளனர். 

பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்து, இந்தக் கூட்டணியை சமாளிக்க காங்கிரஸ் எண்ணியது. அவரும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் காங்கிரஸ் இணைப்பை பிரியங்கா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. இரு கட்சிகளும் போட்டியிடும் இடங்கள் வரைக்கும் அறிவித்து விட்டனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப் பிரதேசம் பெரிய அளவில் கை கொடுக்காது என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் குறித்து மாயாவதி பல சமயங்களில் கடும் விமர்சனங்களை வைத்து வருவதன் மூலம், கூட்டணிக்கான கதவை சாத்திவிட்டார் என்றே தெரிகிறது. 

உ.பி.யை தொடந்து தற்போது மத்தியப் பிரதேசத்திலும் கூட்டணி அறிவிப்பை மாயாவதி - அகிலேஷ் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். ம.பி.யில் இவர்கள் இருவருக்குமான செல்வாக்கு என்பது குறைவாக இருந்த போதிலும் கூட, இவர்கள் ஓட்டுகளை பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை சற்று கடினப்படுத்திய கூட்டணி இவர்கள். இருவருக்கும் சேர்த்து 6 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதனை கொண்டு சில இடங்களில் காங்கிரஸ் அல்லது பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்த முயல்வார்கள். 

இந்நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் 26 இடங்களிலும், சமாஜ்வாதி 3 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசத்தை தாண்டி இவர்களது கூட்டணி விரிவடைந்துள்ளது. டெல்லியில் இப்போது வரை காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் பாஜக வலிமையான கூட்டணியிலுள்ளது. மேற்கு வங்கத்தில் மமதா கூட்டணி அமைப்பாரா என்பது சந்தேகம். ராஜஸ்தானை தவிர காங்கிரஸ் பெரிய அளவில் பலமாக இல்லை. இந்நிலையில் தொடரும் மற்ற கட்சிகளின் கூட்டணி அறிவிப்புகள், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாகவே முடிய வாய்ப்புள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com