விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா; இடம்பெற்ற தமிழக வீரர்

விண்வெளிக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் பெருமை மிகு திட்டம் ககன்யான். 2024-25-ல் நடைபெற உள்ள இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கேப்டன்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரரும் இடம்பெற்றுள்ளார்.
அஜித் கிருஷ்ணன்
அஜித் கிருஷ்ணன்pt web

செய்தியாளர் பாலவெற்றிவேல்

இந்திய விமானப்படை பைலட்டுகளான குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அன்கட் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்ஷூ சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களாக பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சி பெற்றவர். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்ற சிறப்புக்குரியவர் அஜித் கிருஷ்ணன்.

இவர், 2003-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் போர்-விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். மிகவும் சவாலான பணியான இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் இருப்பவர் அஜித் கிருஷ்ணன்.

2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் இவருக்கு உள்ளது. Su-30 MKI, MiG-21, MiG-21, Mig-29, Jaguar, Dornier, An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்த பைலட்டான அஜித் கிருஷ்ணன், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் (DSSC) பயிற்சி பெற்றவர்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்வதற்காக அஜித் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 வீரர்களுக்கும் ஐந்தாண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உடல்திறன், மனவலிமை, வெற்றிடத்தில் வாழும் திறன் உள்ளிட்டவை குறித்த தீவிர பயிற்சிகளுக்குப் பின்னரே விண்வெளிக்குச் செல்ல அஜித் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 வீரர்களும் தயாராகி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com