மகாராஷ்டிரா | நாளை மாலை துணை முதல்வராக பதவியேற்கும் அஜித் பவாரின் மனைவி? துறைகள் ஒதுக்கீடு!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் நாளை (ஜன.31) மாலை 5 மணிக்கு பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர், கலால் மற்றும் விளையாட்டுத் துறைகளை கவனிப்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார், கடந்த ஜன.28ஆம் தேதி காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவாரின் எதிர்பாராத மரணம், மகாயுதி அரசாங்கத்தின் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேசியவாத காங்கிரஸ் முகாமில் தலைமை மற்றும் வாரிசுரிமை குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இதற்கிடையே, மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான பிரபுல் படேல், சாகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, அஜித் பவாரால் காலியாக உள்ள தொகுதியில் தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக்கும் சுனேத்ரா பவாரே போட்டியிட்டு, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டதாகவும் அதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடமும் அவர்கள் வலியுறுத்தியாகக் கூறப்படுகிறது.
அதன்படி, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் நாளை (ஜன.31) மாலை 5 மணிக்கு பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர், கலால் மற்றும் விளையாட்டுத் துறைகளை கவனிப்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அஜித் மற்றும் ஷரத் பவார் குடும்பத்திற்குள் ஆலோசனை நடைபெற்றதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே, சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, அஜித் பவார், ஷரத் பவாருடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததும், அவர்கள் இருவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

