மகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார்? - தகவல்கள் சொல்வது என்ன?
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று அவர் பதவியேற்க மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவியும், 15 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், மேலும் 13 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. பேரவையின் சபாநாயகர் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவார் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவி என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் அது அஜித் பவாருக்குத்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெருங்கிய வட்டாரங்கள், துணை முதல்வராக அஜித் பவாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று அவர் பதவியேற்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளன.