நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: ரூ10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியது ஏர்டெல்

நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: ரூ10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியது ஏர்டெல்
நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: ரூ10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியது ஏர்டெல்

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஏர்டெல் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

இதனையடுத்து ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட 15 செல்போன் சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடியை ஜனவரி 23-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கெடு தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படாத நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். மேலும் தங்கள் உத்தரவை செயல்படுத்தாததுடன், அதை நிறுத்திவைக்க உத்தரவிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல் குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே செல்போன் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என நேற்றிரவு தொலைத் தொடர்புத் துறை அவசர உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 10 ஆயிரம் கோடி ரூபாயை பிப்ரவரி 20-ஆம் தேதி செலுத்தி விடுவதாகவும், மீதமுள்ள தொகையை மார்ச் மாதம் 17-ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசுக்கு தொகையை செலுத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து நிலுவைத் தொகையின் ஒருபகுதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு ஏர்டெல் செலுத்தியுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் போக, 25,586 கோடி ஏர்டெல் நிறுவனத்திற்கு இன்னும் பாக்கித் தொகை உள்ளது.

நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகள்:

ஏர்டெல் - 35,586 கோடி
வோடாஃபோன் - 53,000 கோடி
டாடா டெலி சர்வீஸ் - 13,800 கோடி
பிஎஸ்என்எல் - 4,989 கோடி
எம்.டி.என்.எல் - 3,122 கோடி

இதில், அரசின் நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்.டி.என்.எல் ஆகியவையும் தங்களது பாக்கித் தொகையை இன்னும் செலுத்தவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com