மங்களூர் ஏர்போர்ட்டை 50 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்த அதானி குழுமம்
அதானி குழுமம் மங்களூர் ஏர்போர்ட்டை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தைதொடர்ந்து நேற்று நள்ளிரவு அனைத்து உரிமைகளையும் இந்திய விமான நிலைய ஆணையம் அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு குத்தகைக்கு ஏலம் விட்டது. இவை அனைத்தையும் அதானி குழுமம் கைப்பற்றியது. இதற்கான ஒப்பந்தத்தின்படி, முதன்மையாக இந்திய விமான நிலைய ஆணையம் மங்களூர் ஏர்போர்ட்டை அதானி குழுமத்திடம் 50 ஆண்டுகள் குத்தகைக்காக ஒப்படைத்துள்ளது.
இதுகுறித்து மங்களூர் ஏர்போர்ட் தனது டிவிட்டர் பக்கத்தில், “உங்கள் வாழ்க்கையில் நன்மைக்கான நுழைவாயிலை வரவேற்கிறோம். உங்களுக்கு சேவை செய்ய மங்களூர் சர்வதேச விமான நிலையம் பாக்கியம் பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மற்றொரு டிவிட்டில் “நன்மைக்கான நுழைவாயில் உலகிற்குத் திறக்கும்போது, மங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் பயணிகளை வரவேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எவ்வளவு பாக்கியமாக உணர்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து லக்னோ விமான நிலையம் நவம்பர் 2ஆம் தேதியும் அகமதாபாத் ஏர்போர்ட் நவம்பர் 11 ஆம் தேதியும் ஒப்படைக்கப்பட உள்ளது.