ஆபாசக் கிண்டல்: இளைஞரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்!
தன்னை ஆபாசமாக பேசிய போதை இளைஞரை, விரட்டிச் சென்று பிடித்த இளம் பெண் போலீசில் ஒப்படைத்தார்.
மும்பை, விலே பார்லே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பினார். அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிச் சென்று ராஜேந்திரபிரசாத் நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். அங்கிருந்து பேருந்தில், விலே பார்லே செல்வதற்காக அவர் காத்திருந்தார்.
அப்போது குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர், அவரிடம் ஆபாசமாக பேசினார். பின்னர் ’ஐட்டம்’ என்று தரக்குறைவாகக் கூறிவிட்டு வேகவேகமாகச் சென்றார். இந்த வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த அந்த இளம்பெண், போதை இளைஞரை பின் தொடர்ந்தார். அவர் வீட்டைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் ஃபோன் செய்தார். அவர்கள் வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தினேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர்.
இதுபற்றி அந்த இளம்பெண் கூறும்போது, ‘’சாலையை கடக்கும் போது அந்த இளைஞர் என்னை ஆபாசமாக பேசினார். இதனால் அவரை விரட்டிச் சென்று வீட்டைக் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தேன்’’ என்றார்.