ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்ட பெண்: கட்டணத்தைத் திருப்பிக்கொடுத்தது ’மகராஜா’!

ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்ட பெண்: கட்டணத்தைத் திருப்பிக்கொடுத்தது ’மகராஜா’!
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்ட பெண்: கட்டணத்தைத் திருப்பிக்கொடுத்தது ’மகராஜா’!

விமானத்தில் மூட்டைப்பூச்சி கடித்ததால் 17 மணி நேரம், காயங்களுடன் அவதிப்பட்ட இந்திய பெண் பயணிக்குப் பயணக் கட்டணத்தைத் திருப்பிக்கொடுத்தது, ஏர் இந்தியா விமான நிறுவனம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு தினமும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண், சவும்யா ஷெட்டி கடந்த 18ஆம் தேதி பயணம் செய்தார். தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு குழந்தை களுடன் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் வந்தார். இதற்காக 10 ஆயிரம் டாலரை கட்டணமாகச் செலுத்தினார். நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு 17 மணி நேர பயணம். நிம்மதியாகத் தூங்கி, ஊரில் இறங்கலாம் என்று நினைத்த சவும்யாவுக்கு மூட்டைப் பூச்சி வடிவில் வந்தது சிக்கல்!

’என்னமோ கடித்துக்கொண்டிருக்கிறதே’ என்று நினைத்தபடி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என அட்ஜஸ்ட் செய்துகொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் எழுந்து நின்று பார்த்தார். சீட் முழுவதும் குடும்பத்தோடு ஓடியாடிக்கொண்டிருந்தது மூட்டைப் பூச்சிகள். அதிர்ச்சி அடைந்தார் சவும்யா. மூட்டைப் பூச்சிகள் பஸ்சில் இருக்கலாம், ரயிலில் இருக்கலாம். விமானத்தில் அதுவும் பிசினஸ் கிளாஸில் எப்படி என ஆச்சரியமடைந்தார். தாங்க முடியாத அவர், இதுபற்றி விமானப் பணிப்பெண்களிடம் சொன்னார். அவர்கள் ஏதோ சாக்குப் போக்கி சொல்லி, சீட்டை துடைத்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால், டெல்லி வரும் வரை, மூட்டைப் பூச்சி கடியால் அவதிப்பட்ட சவும்யா தூங்கவே இல்லை. இப்படியொரு அவஸ்தையை எங்கும் பார்க்காத சவும்யா, ட்விட்டரில் இதுபற்றி புகைப்படத்துடன் பதிவிட்டு காட்டமாக விமர்சித்திருந்தார். ’அதில் என் குழந்தைகளுக்கு சவுகரியமாக இருக்கும் என்றுதான் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தேன். ஆனால் எங்கள் தூக்கம் போய்விட்டது’ என்று கூறியிருந்தார்.

இவருக்கு முன், பிரவின் டான்சேகர் என்பவரும் மூட்டைப் பூச்சியால் அவதிப்பட்டு ட்விட்டரில் பதிவிட்டார். அதை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருக்கும் டேக் செய்திருந்தார்.

அதில், ‘நியூயார்க்கில் இருந்து இப்போதுதான் வந்தேன். எங்கள் இருக்கை மூட்டைப் பூச்சிகளால் நிரம்பி இருந்தது. ரயிலில் மூட்டைப் பூச்சிகளை கேள்விபட்டிருக்கிறேன். நம்ம ’மகாராஜா’வில் எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் பிசினஸ் கிளாஸில்?’ என்று குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. 

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதோடு இதுபற்றி புகார் தெரிவித்த சவும்யா ஷெட்டிக்கு அவர் கட்டிய கட்டணத்தில் வரியை தவிர மீதியுள்ள 70 சதவிகிதத்தைத் திருப்பிக்கொடுக்க முன் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com