‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவில்லை என்றால் மூட வேண்டும்’- மத்திய அமைச்சர்
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் விட்டால் அதனை மூடியிருக்க தான் வேண்டும் என்று விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிட்டு வந்தது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் கருத்து தெரிவித்து வந்தார். அத்துடன் மத்திய அரசின் அமைச்சரவையும் இந்தக் கொள்கை முடிவிற்கு ஒப்புதல் அளித்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஏர் இந்தியா தனியார் வசம் சென்றுவிடும் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார். அதில், “ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால், அதனை மூடியிருக்க தான் வேண்டும். ஏனென்றால் இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்டவற்றில் தரையிறங்கும் அனுமதி இருந்த போதும் இதன் நஷ்டம் தான் அரசை விற்கும் முடிவை எடுக்க வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.