மே 25 முதல் ஏர் இந்தியாவில் முன்பதிவு ! : டெல்லி டு மும்பை இடையே ரூ.5,900 கட்டணம்
மே 25 ஆம் தேதி முதல் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்குகிறது. இதில், டெல்லி - மும்பை இடையேயான விமானத்தில் செல்ல ரூ.5,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றுக்கு படிப்படியாக அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். படிப்படியாக விமானச் சேவை முழு அளவுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், 25-ம் தேதி விமானச் சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்பதிவு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஆனால் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாக எழுந்த புகார் எழுந்தது. உதாரணமாகச் சென்னை-டெல்லி, சென்னை -கொல்கத்தா வழித்தடங்களில் கட்டணங்கள் 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதன் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏர் இந்தியா உள்நாட்டு விமானச் சேவைக்கான முன்பதிவு 25 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி - மும்பை இடையிலான விமான பயணத்துக்கான கட்டணம் ரூ.5,900-இல் தொடங்குகிறது. இது அதிகபட்சம் ரூ.10,000 வரை செல்லும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.