விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்... 242 பேரின் கதி என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
விமான கண்காணிப்பு சேவையான Flightradar24இன் தரவுகளின் படி, விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறிய சில வினாடிகளில் மணிக்கு சிக்னலை இழந்தது. 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்த பயணிகளின் நிலை முழுமையாகத் தெரியாத நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
எர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவு
இதுதொடர்பாக எர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்-லண்டன் கேட்விக் செல்லும் விமானம் AI171, இன்று, ஜூன் 12, 2025 விபத்திற்குள்ளானது. மேலதிக விபரங்களை உறுதி செய்து வருகிறோம். கூடுதல் தகவல்களை airindia.com மற்றும் எங்கள் X தளத்தில் பகிர்ந்து கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்4 கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விமானப் போக்குவரத்து துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். மேலும், மத்திய அரசின் உதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலில் ரூபானி விஜய் ராம்னிக்லால் என்ற பெயர் உள்ளது. இவர் குஜராத்தின் 16 ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை செயல்பட்டவர்...