\
Air India flight
Air India flightReuters

ஏர் இந்தியா சம்பவத்தில் அடுத்த 'Shock'.. வெளியான தகவலால் Twist! விமானத்துக்குள் நடந்த 'மர்மம்'?

‘Pilot-ன் தவறா? இல்லை... Technical problem-ஆ?’ என விவாதத்தை கிளப்பிய ஏர்பஸ் A320 சம்பவம் குறித்து தற்போது வெளியாகும் ஒவ்வொரு புதிய தகவலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Published on
Summary

ஆகஸ்ட் 4 அன்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கு என்ன காரணம் என்பது குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது..

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 விமானம், 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென அடுத்தடுத்து பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், விமானத்தை தானாகவே குறிப்பிட்ட பாதையிலும் உயரத்திலும் இயக்கும் ‘ஆட்டோபைலட்’ அமைப்பின் செயல்பாடு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு சில விநாடிகள் விமானம் மேலெழுப்ப முடியாத அபாய எச்சரிக்கையும் ஒலித்தது. அதாவது விமானத்தின் இறக்கை போதுமான அளவுக்கு மேலெழும்பும் திறன் உருவாக்காமல், விமானம் சரியும் நிலைக்கு அருகில் சென்றுவிட்டதாக எச்சரிக்கை ஒலித்தது.

விமானம் பறந்துகொண்டிருந்தபோது, முதலில் விமானத்தை இயக்குவதற்கு தேவையான ‘Green’ ஹைட்ராலிக் அமைப்பில் அழுத்தம் குறைந்தது. விமானத்தில் உள்ள ஹைட்ராலிக் அமைப்பு என்பது, விமானத்தின் முக்கிய கட்டுப்பாடுகளை இயக்குவதற்குத் தேவையான சக்தியை வழங்கும் திரவ அழுத்த அமைப்பு. விமானத்தில் இதுபோன்று மூன்று தனித்தனி அமைப்புகள் உள்ளன.

Air India flight
Air India flightReuters

முதல் அமைப்பில் அழுத்தம் குறைந்த நான்கு விநாடிகளுக்குள், ‘Blue’ மற்றும் ‘Yellow’ எனப்படும் மற்ற இரண்டு அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆட்டோபைலட் துண்டிக்கப்பட்டு, தொடர்ந்து எச்சரிக்கை ஒலிகள் எழுந்தன. மூன்று விநாடிகளுக்குப் பிறகு, சுமார் இரண்டு விநாடிகள் எச்சரிக்கையும் ஒலித்தது.

விமானம் திடீரென மேலெழுந்து பின்னர் கீழிறங்கியபோது, இருக்கைகளில் seat belt அணியாமல் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தூக்கி வீசப்பட்டு, மேலே இருந்த பெட்டிகள் மற்றும் கேபின் பகுதிகளில் மோதினர்.

விமானம் முதலில் வழக்கமான உயரத்தை விட 372 அடி மேலே சென்றது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட 292 அடி கீழே இறங்கியது. சுமார் ஒன்பது விநாடிகளுக்குப் பிறகு, ஹைட்ராலிக் அமைப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இந்த சம்பவம் முதலில் ‘Serious Incident’ எனப்படும் தீவிரமான விமானச் சம்பவமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது விசாரணை அதிகாரிகள் இதை ‘Accident’ எனப்படும் விபத்து என வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஹைட்ராலிக் அமைப்புகளில் அழுத்தம் ஏன் திடீரென குறைந்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

137 பயணிகள், 6 கேபின் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. மருத்துவக் குழுக்கள் 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமானத்தின் உள்ளே இருந்த மேற்கூரைப் பகுதிகள், பயணிகள் பிடித்துக்கொள்ளும் கைப்பிடிகள், மேல்நிலைப் பெட்டிகளின் கதவுகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

இதனிடையே, விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பு, அதன் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானிகளின் போதைப்பொருள் பரிசோதனை முடிவுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் விமான கேப்டனின் பரிசோதனை முடிவு ‘Non-negative’ என வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு முதற்கட்ட அறிக்கை என்பதால், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, இந்த முதற்கட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை என விமான விபத்து விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு உண்மை காரணம் என்ன என்ற மர்ம முடுச்சு, முழுமையான விசாரணை முடியும் வரை அவிழப்போவதில்லை என்றே தெரிகிறது.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com