கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதையிலிருந்து விலகி ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்தில் 102 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் தரையிறங்கிய போது திடீரென்று தடுமாறி ஓடுபாதையை விட்டு விலகியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
இருப்பினும், விமானியின் சாதுர்யத்தால் விமானம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தின் முன்பக்க டயர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.