அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்- மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்- மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சு
அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும்- மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் இன்று பேசினார்.

மக்களவையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ரவீந்தரநாத் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து தமிழகம் வெற்றி நடைபோடும் எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தமிழகம் வந்திருந்தது குறித்து பேசிய ரவீந்தரநாத், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து ஜல்லிக்கட்டை ரசிக்கிறார் ராகுல்காந்தி என பேசினார். தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் சிறப்பான முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு காரணமாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்த வரலாறை மறுக்க முடியாது.


தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இன்று நாட்டிலேயே சிறந்த மாநிலமாக பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. ஆனால் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகம் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல வெற்றுக் கூச்சலிட்டு வருகிறார்கள்.”என்றார்.

பட்ஜெட்டுக்கு ஆதரவளித்து பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பெரும்தொற்றை தடுக்க தமிழகத்துக்கு கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும் ரவீந்தரநாத் கேட்டுக்கொண்டார். பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 2 பூங்காக்கள் தமிழகத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

"தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆகியவை மத்திய அரசின் சிறப்பான முடிவுகள்" என்றார்.

மக்களவையில் தமிழிலேயே பேசிய ரவீந்திரநாத் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேச்சை சுட்டிக்காட்டி மழை பெய்யும் போது பிற பறவைகள் தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து மழையிலிருந்து தப்ப முற்படும்போது பருந்து மட்டும் மேகத்துக்கு மேல் பறந்து தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லும் என்று பேசி இருந்ததாகவும் அதேபோல் தான் கொரோனா பெரும்தொற்று காலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பிரச்னையை சமாளித்தார் என்றும் பாராட்டினார்.

தமிழக அரசும் சிறப்பான முறையில் செயல்பட்டு இதுவரை 7000 கோடி ரூபாய் செலவு செய்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உள்ளது என்று ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com